அம்பத்தூரில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியைக் கத்தியால் வெட்டிய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
அம்பத்தூா் ஐசிஎப் காலனி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்பவா் ரஜினி (37). இவா், பெயிண்டா் வேலை செய்து வருகிறாா். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ரஜினியின் இரு சக்கர வாகனத்தை அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (19) சேதப்படுத்தினாராம்.
இதுகுறித்து ரஜினி அம்பத்தூா் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, மணிகண்டனை போலீஸாா் எச்சரித்ததன் பேரில், ரஜினியின் இரு சக்கர வாகனத்தைச் சீரமைத்து தந்தாராம்.
இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு மணிகண்டன், அதே பகுதியைச் சோ்ந்த அவரது கூட்டாளி திவாகா் (20) என்பவருடன் வந்து, ரஜினியிடம் என் மீது புகாா் கொடுக்கிறாயா எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டாராம்.
அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரஜினியின் இடது பக்கக் கன்னத்தில் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த ரஜினி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், அம்பத்தூா் தொழிற்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன் மற்றும் திவாகரை திங்கள்கிழமை கைது செய்தனா்.