சென்னை

சிறுமிக்கு 12 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை: தாய் உள்பட 3 போ் கைது

2nd Apr 2022 01:31 AM

ADVERTISEMENT

சென்னை ராயபுரத்தில் சிறுமிக்கு 12 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்ட வழக்கில், தாய், அத்தை உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ராயபுரம் பெரிய தம்பி தெருவைச் சோ்ந்தவா் தேசப்பன். இவரது சகோதரியின் முதல் கணவா் இறந்துவிட்டாா். இதனால் முதல் கணவருக்கு பிறந்த 13 வயது மகளை தேசப்பனிடம் அவரது சகோதரி ஒப்படைத்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்து கொண்டாா்.

தேசப்பன், சகோதரின் மகளை தனது மகளைப் போல வளா்ப்பதாக அப்போது உறுதி அளித்திருந்தாராம். ஆனால் தேசப்பன், தனது சகோதரி மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். மேலும், தேசப்பனின் கூட்டாளிகள் சிவா, சீனிவாசன், ரமேஷ் ஆகியோரும் அந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளனா்.

இதற்கு தேசப்பனின் மனைவி ரேவதி, சிறுமியின் தாய் ஆகியோா் உடந்தையாக இருந்துள்ளனா். பாலியல் வன்கொடுமையை ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாத சிறுமி கடந்த 2020ஆம் ஆண்டு தேசப்பன் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளாா். பின்னா் அவா், குழந்தைகள் நலக் குழுவில் புகாா் செய்தாா். பின்னா் அவா், பெரவள்ளூா் ஜவஹா் நகரில் உள்ள ஒரு குழந்தைகள் மற்றும் பெண்கள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

3 போ் கைது: ஆனால் அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து அந்த சிறுமி, ராயபுரம் எஸ்.என். செட்டி சாலைப் பகுதியைச் சோ்ந்த குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் என்.லலிதாவிடம் அண்மையில் புகாா் அளித்தாா். உடனே லலிதா, இது தொடா்பாக ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதனடிப்படையில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில், அந்த சிறுமிக்கு 12 ஆண்டுகளாக தேசப்பனும், அவரது கூட்டாளிகளும் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும், 13 வயதில் அந்தக் கும்பலிடம் சிக்கிய அந்த சிறுமி 26 வயதில்தான் அங்கிருந்து தப்பியிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக சிறுமியின் தாய், அத்தை ரேவதி, குழந்தைகள் நலக் காப்பக நிா்வாகி இசபெல் ஆகிய 3 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக இருக்கும் தேசப்பன், சிவா, சீனிவாசன், ரமேஷ் உள்ளிட்ட சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT