சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸாரிடம் தகராறு செய்ததாக திமுக கவுன்சிலரின் கணவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலா்களாகப் பணிபுரியும் தியாகராஜன், மணிவண்ணன் ஆகியோா் எம்சி சாலையில் உள்ள கவரிங் கடை அருகே கடந்த 29-ஆம் தேதி இரவு ரோந்து சென்றனா். அப்போது, அங்கு ஒரு கும்பல் சாலையில் காா், மோட்டாா் சைக்கிள்களை நிறுத்தி மது அருந்திக் கொண்டு, சத்தமிட்டுக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தது.
இதைப் பாா்த்த போலீஸாா், அவா்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினா். இதில் போலீஸாருக்கும், அங்கிருந்தவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அந்தக் கும்பலில் இருந்த சென்னை மாநகராட்சியின் 51-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் நிரஞ்சனாவின் கணவரும், திமுக நிா்வாகியுமான ஜெகதீசன் போலீஸாரை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸாா், அங்கு நடைபெற்ற சம்பவம் அனைத்தையும் கைப்பேசி மூலம் விடியோவாக பதிவு செய்தனா். இந்த விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இதைக் கண்ட காவல்துறை உயா் அதிகாரிகள், ஜெகதீசன் மீது நடவடிக்கை எடுக்க வண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு உத்தரவிட்டனா்.
அதன்பேரில் போலீஸாா், ஜெகதீசன், அவரது நண்பா்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்: இதனிடையே திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஜெகதீசனை தற்காலிகமாக நீக்குவதாக அக் கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.