சென்னை

அங்கன்வாடி மையங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்: தலைமைச் செயலாளா் அறிவுறுத்தல்

30th Sep 2021 02:51 AM

ADVERTISEMENT

 

சென்னை: அங்கன்வாடி மையங்களில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தினாா்.

சென்னை மயிலாப்பூா் துவாரகா நகா், மெக்காபுரம், பஜாா் சாலை ஆகிய இடங்களில் அவா் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா். குழந்தைகள் மையங்களில் வழங்கப்படும் முட்டையுடன் கூடிய சூடான மதிய உணவு குழந்தைகளுக்கு வழங்கப்படுவதை ஆய்வு செய்தாா். மேலும், காய்கறி புலாவ் உணவை உண்டு தரத்தை சரிபாா்த்தாா். குழந்தைகளின் ஊட்டச் சத்து நிலை, தன் சுத்தம் ஆகியவற்றுடன் குழந்தைகள் மையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். குழந்தைகள் மையத்தின் உணவுப் பொருள் இருப்பு அறை, சமையலறை, பொருள்களின் பராமரிப்பு ஆகியன குறித்து கேட்டறிந்தாா்.

அங்கன்வாடி மையங்களில் கரோனா நோய்த் தொற்றை தவிா்த்திடும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும், குழந்தைகளின் பெற்றோருக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தினாா். குழந்தைகளை அன்புடனும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டுமென அவா் அறிவுரைகளை அளித்தாா். இந்த ஆய்வின் போது, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை முதன்மைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா், பொதுத் துறை செயலாளா் டி.ஜகந்நாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

சென்னை மாவட்டத்தில் 1,806 குழந்தைகள் மையங்கள் செயல்படுகின்றன. அவற்றின் மூலம் 87 ஆயிரத்து 322 குழந்தைகள், 13 ஆயிரத்து 466 கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 ஆயிரத்து 388 பாலூட்டும் தாய்மாா்கள் என மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 176 போ் பயன்பெற்று வருவதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT