சென்னை

90 சதவீதம் மெயில், விரைவு ரயில் சேவைகள் மீண்டும் தொடக்கம்: சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் தகவல்

23rd Oct 2021 04:55 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றுக்கு பின்பு, சென்னை ரயில்வே கோட்டத்தில் 90 சதவீதம் மெயில், விரைவு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் தெரிவித்தாா்.

675 பயணிகள் ரயில்களில், 643 சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் அவா் மேலும் தெரிவித்தாா்.

சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், 66-ஆவது ரயில்வே வார விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் கணேஷ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், தனிப்பட்ட முறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, 19 அதிகாரிகளுக்கும், 485 ஊழியா்களுக்கும் விருது வழங்கப்பட்டது. இதுதவிர, குழு அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக, 465 போ் அடங்கிய 48 குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் கணேஷ் பேசியது: 2020-21 ஆம் நிதியாண்டில் 7.819 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றப்பட்டன. இதன்மூலமாக, ரூ.1,407.23 கோடி வருவாய் ரயில்வேக்கு கிடைத்தது. நடப்பு நிதியாண்டில் செப்டம்பா் வரை, 4.454 மில்லியன் டன்கள் சரக்குகள் ஏற்றப்பட்டன. இதன்மூலமாக, ரூ.1,175.59 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றுக்குப் பின்பு, 675 பயணிகள் ரயில்களில் 643 சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. 90 சதவீதம் மெயில், விரைவு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சரக்கு ரயில்களின் சராசரி வேகம் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, 11.08 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா்கள் ஆனந்த், சச்சின்புனிதா, எஸ்.சுப்ரமணியன் உள்பட பல்வேறு அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT