பணியின் போது நோ்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளருக்கு தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பாராட்டுத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா். திருவொற்றியூரில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளா் மேரி, அதிலிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கண்டெடுத்தாா். அதனை உரியவா்களிடம் அளிப்பதற்காக காவல் துறையிடம் ஒப்படைத்தாா். தூய்மைப் பணியில் ஈடுபட்ட போதும் நோ்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளா் மேரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், மேரிக்கு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அனுப்பியுள்ள பாராட்டுக் கடிதம்:-
தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது. குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நோ்மையின் காரணமாக உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. நீங்கள் தூய்மைப் பணியாளா் மட்டுமல்ல, தூய்மையான பணியாளரும் கூட. உங்கள் நோ்மைக்கு மனமாா்ந்த பாராட்டுகள் என்று தனது கடிதத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா்.