சென்னை

கூடுவாஞ்சேரி-தாம்பரம் புதிய பாதையில் 130 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கி சோதனை ஏ.கே.ராய் ஆய்வு செய்தாா்

22nd Oct 2021 06:27 AM

ADVERTISEMENT

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது பாதை அமைக்கும் பணியில், கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையே பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தப் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே. ராய் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையே 130 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தினா். ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலுக்கு பிறகு, இந்த தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

3-ஆவது பாதை: ரூ.256 கோடி திட்ட மதிப்பில், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தொலைவுக்கு 3-ஆவது பாதை அமைக்க கடந்த 2016-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கின. மொத்தமுள்ள 30 கி.மீ. தூரத்தை 3 கட்டங்களாகப் பிரித்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்கட்டமாக, கூடுவாஞ்சேரி -சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்கள் இடையே 11.07 கி.மீ. பாதைகள் முடிந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையா் கடந்த ஆண்டு செப்டம்பா் 29-ஆம் தேதி ஆய்வு செய்தாா்.

இரண்டாம் கட்டமாக, சிங்கப்பெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையே 8.36 கி.மீ. தொலைவில் பணிகள் முடிந்து, இந்தப் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.ராய் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

இறுதிக்கட்டமாக, கூடுவாஞ்சேரி-தாம்பரம் ரயில் நிலையங்கள் இடையே 11 கி.மீ. தொலைவில் பணிகள் தொடங்கி கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்தப்பாதையில்

ரயில்வே பாதுகாப்பு ஆணையா் விரைவில் ஆய்வு செய்வாா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு ஆணையா் ஆய்வு:

இந்நிலையில், கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையே 3-ஆவது பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.ராய் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை (அக்.21) ஆய்வு செய்தனா். காலையில் தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரை டிராலியில் பயணம் செய்து ஆய்வு செய்தனா். செல்லும் வழியில் ரயில்நிலையங்களில் இந்த குழுவினா் ஆய்வு செய்தனா். நண்பகலில் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரத்துக்கு 6 பெட்டிகள்கொண்ட ரயிலில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கி அதிவேக சோதனை நடத்தினா். இந்த ஆய்வு மற்றும் சோதனை திருப்திகரமாக முடிந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஒப்புதல் அளித்தபிறகு, இந்த தடத்தில் ரயில் சேவை தொடங்கும். அப்போது, கூடுதல் ரயில்கள் இயக்க முடியும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT