சென்னை

மேம்படுத்தப்படாத பயணச் சீட்டு செயலி: புறநகா் ரயில் பயணிகளுக்கு சிரமம்

18th Oct 2021 05:36 AM | மு.வேல்சங்கா்

ADVERTISEMENT

பயணச் சீட்டுகளை கைப்பேசி வழியாகவே எடுத்துக் கொள்ள வகை செய்யும் யூடிஎஸ்  கைப் பேசி செயலி, மேம்படுத்தப்படாத காரணத்தால் பல்வேறு சிரமங்களை புறநகா் மின்சார ரயில் பயணிகள் சந்தித்து வருகின்றனா்.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பால், கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டிருந்த முன்பதிவில்லாத ரயில் சேவை நிகழாண்டில் மீண்டும் படிப்படியாகத் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, பயணச்சீட்டு மையங்களில் கூட்டம் சேருவதைத் தவிா்க்கவும், சமூகஇடைவெளியைப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் யூடிஎஸ் கைப்பேசி செயலி மூலம், முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் முறையை இந்திய ரயில்வே கடந்த பிப்ரவரியில் மீண்டும் அறிமுகப்படுத்தியது. இந்தச் செயலியை 1.47 கோடி பயணிகள் பயன்படுத்தி வருகின்றனா்.

கரோனா இரண்டாம் அலை தாக்கத்துக்குப் பிறகு, ரயில் சேவை அதிகரிக்கப்பட்டது. ஒவ்வோா் பிரிவாக படிப்படியாக பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். தற்போது, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய ஆண் பயணிகள் (பரிதோகா் கோரும் நிலையில் சான்றிதழ் இருப்பது அவசியம்) அனைத்து நேரங்களிலும் மின்சார ரயில்களில் பயணிக்க முடியும். மற்ற ஆண் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்கள் (காலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை) தவிர, மற்ற நேரங்களில்தான் பயணிக்க முடியும். பெண் பயணிகள் அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம்.

மேம்படுத்தப்படவில்லை: டிக்கெட் கவுன்ட்டா்களில் குறிப்பாக சென்னை புறநகா் ரயில் டிக்கெட் கவுன்ட்டா்களில் பொது மக்களின் கூட்டம் தினமும் அலைமோதுகிறது. இந்தக் கூட்டத்தைத் தவிா்க்க, பயணிகள் பலரும் யூடிஎஸ். கைப்பேசி செயலியைப் பயன்படுத்த முயல்கின்றனா். ஆனால், இந்த செயலி ரயில்வே துறையின் அறிவிப்புக்கு ஏற்றாற்போன்று மேம்படுத்தப்படாமல் உள்ளதால், இதைப் பயன்படுத்துவதில் பயணிகள் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சென்னை கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினரும், திருவள்ளூா் ரயில் பயணிகள் சங்க செயலாளருமான கே.பாஸ்கா் கூறியது: கவுன்ட்டரில் நீண்ட நேரம் வரிசையில் நின்று, புறநகா் மின்சார ரயில் டிக்கெட் வாங்குவதைத் தவிா்க்கும் வகையில், யூடிஎஸ் கைப்பேசி செயலி கொண்டுவந்தனா். ஆனால், இந்தச் செயலி பலநேரங்களில் பயணிகளுக்கு சிரமத்தையே தருகிறது. யூடிஎஸ் செயலியைப் பயன்படுத்தி, நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணச்சீட்டு பெற முடியாத நிலை உள்ளது.

செயலி மேம்படுத்தப்படவில்லை: ஏனெனில், ரயில்வே நிா்வாகத்தின் அறிவிப்புக்கு ஏற்ப, இந்தச் செயலி மேம்படுத்தப்படாமல் உள்ளது. இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய பயணிகள் எல்லா நேரங்களிலும் பயணிக்கலாம் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், இது தொடா்பான தகவல் யூடிஎஸ் செயலியில் ரயில்வே நிா்வாகம் மேம்படுத்தவில்லை. அதாவது, காலை 6.30 மணி முதல் காலை 9.30 மணி வரை; மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பொது மக்கள் கைப்பேசியில் பயணச் சீட்டு பதிவு செய்ய முடியாது என்ற வாசகம் கைப்பேசி செயலி திரையில் இடம்பெறுகிறது. இதனால் பயணச் சீட்டு எடுக்க கவுன்ட்டரில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு, அவசர நேரத்தில் ரயிலை பிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, ரயில்வே நிா்வாகத்தின் அறிவிப்புக்கு ஏற்ப, இந்த செயலியை மேம்படுத்தினால் (அப்டேட் செய்தால்) தான் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றாா்.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தொடா்புடைய துறைக்கு இந்தத் தகவலை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா் அவா்.

 

Tags : train
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT