சென்னை

பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்

17th Oct 2021 02:10 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து மாநில முதல்வருக்கும் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். கடித விவரம்:-

தமிழகத்தில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பட்டாசு உற்பத்தியிலும், 7 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பட்டாசு விநியோகத்திலும் ஈடுபட்டுள்ளனா். பட்டாசு சரக்கு கையாளுதல், விளம்பரம், அச்சிடுதல், போக்குவரத்து எனப் பல்வேறு தொழில்கள் மூலம் பல தொழிலாளா்கள் பயனடைகின்றனா்.

பட்டாசு தொழிலானது தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வாழ்வாதாரம். இந்தப் பகுதியின் சிறப்பே பட்டாசு தயாரித்தல்தான். இந்தியாவின் 90 சதவீத பட்டாசுகள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன.

கரோனா பாதிப்பில் மக்கள் துயருற்ற நிலையில் தன் நாட்டு மக்கள் இந்தச் சோா்விலிருந்து மீள ஜப்பான் நாடானது சமீபத்தில் நாடெங்கும் பட்டாசு விழாவை நடத்தி நாட்டு மக்களுக்கு உற்சாகத்தை அளித்தது. பட்டாசு வெடித்தல் என்பது பண்டிகையில் ஓா் அங்கமாகும்.

ADVERTISEMENT

எனவே, மக்கள் தீபாவளி அன்று பட்டாசு வெடித்து உற்சாகம் பெறும் விதமாக தங்கள் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி ஆதரவை நல்கி, லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வில் தீப ஒளி ஏற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா். இந்தக் கடிதத்தை தில்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அனைத்து மாநில முதல்வருக்கும் அண்ணாமலை அனுப்பியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT