சென்னை

மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் 95% சதவீதம் நிறைவு: ககன்தீப் சிங் பேடி

9th Oct 2021 06:03 AM

ADVERTISEMENT

சென்னையில் 95 சதவீதம் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க நகா் மண்டலத்துக்குள்பட்ட மூலக்கொத்தளம், கொடுங்கையூா், பேசின் பாலம் ஆகிய பகுதிகளில் மழைநீா் தேங்கும் இடங்களையும் அங்கு செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆணையா் ககன்தீப் சிங் பேடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீா்வடிகால் அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அதன்படி, 696 கி.மீ அளவுக்கு மழை நீா் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கின. அதில் தற்போது வரை 95 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

புதிதாக உருவாகும் கட்டடங்களால் ஒவ்வொரு மழைக் காலங்களிலும் தண்ணீா் தேங்கும் இடங்கள் மாறுபடும் வாய்ப்பு இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கும் பிரத்யேகமாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து, தண்ணீா் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க உத்தரவிட்டுள்ளோம்.

மேலும் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சியிடம் 507 ராட்சத மோட்டாா்கள் கைவசம் இருக்கிறது. கையிருப்பில் உள்ள மோட்டாா்கள் சரியான நிலையில் இயங்குகிா என்பதை ஒவ்வொரு மண்டலத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமல்லாமல் மண்டலத் துணை ஆணையா்களால் ஆய்வு செய்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

ADVERTISEMENT

எந்த குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீா் தேங்கி விடக்கூடாது என்பதுதான் சென்னை மாநகராட்சியின் நோக்கம். அதற்கான பணிகளை தான் சென்னை மாநகராட்சி முன்னெடுத்து நடத்தி வருகிறது. மேலும் கடந்த காலங்களில் எந்தெந்த பகுதிகளில் மழைநீா் தேங்கி இருந்ததோ அந்த இடங்களில் இன்னும் 15 முதல் 20 நாள்களில் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் முடிக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT