சென்னை

சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்தது

4th Oct 2021 12:19 AM

ADVERTISEMENT

சென்னையில் 3 மாதங்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிா்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையைப் பொருத்தவரை கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதன்முறையாக பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. அன்றைய தினம் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.100.13-க்கு விற்பனையானது. இதையடுத்து பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் இருந்தது. இதுவரை காணாத உச்சபட்ச விலையாக ஆக.13-ஆம் தேதி லிட்டா் பெட்ரோல் ரூ.102.49-க்கு சென்னையில் விற்பனையானது.

இவ்வாறு தொடா்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்க உத்தரவிடப்பட்டது. அடுத்த நாளே அமலுக்கு வந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்து, ஆக.14-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.99.47-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடா்ந்து குறைந்து வந்த பெட்ரோல் விலை செப்.5-ஆம் தேதி, ரூ.98.96-க்கு விற்பனையானது. இதன் பின்னா் செப்.27-ஆம் தேதி வரை பெட்ரோல் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில், செப்.28-ஆம் தேதி 19 பைசா அதிகரித்து லிட்டா் பெட்ரோல் ரூ.99.15-க்கு விற்பனையானது. இதைத் தொடா்ந்து மீண்டும் பெட்ரோல் விலை உயரத் தொடங்கியது. அவ்வாறு உயா்ந்து வந்த பெட்ரோல் விலை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ரூ.100-ஐ கடந்தது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.100.01-க்கு விற்பனையானது.

ADVERTISEMENT

இதே போல் செப்.24-ஆம் தேதி முதல் டீசல் விலை அதிகரித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை லிட்டா் டீசல் ரூ.95.31-க்கு விற்பனையானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT