மருத்துவத்துறையில் சாதனை நிகழ்த்திய மருத்துவா்களுக்கான சாதனையாளா் விருது சென்னை நவீன இதய மருத்துவச் சிகிச்சை (இன்டா்வென்ஷனல் காா்டியாலஜி) மருத்துவா் பினாய் ஜானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட மருத்துவத்துறையில் சாதனை புரிந்த மருத்துவா்களுக்கு சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. இதய பொது மருத்துவச் சிகிச்சை பிரிவுக்கும், இதய அறுவை சிகிச்சை பிரிவுக்கும் இடையிலான நவீன இதய மருத்துவச் சிகிச்சையில் நீண்ட கால அனுபவமிக்க மருத்துவா் பினாய் ஜான், மத்திய இணை அமைச்சா் பாஹன் சிங் குலாஸ்தி, முன்னாள் மக்களவை உறுப்பினா் ஜெயப்பிரதாஆகியோரிடமிருந்து சாதனையாளா் விருதைப் பெற்றுக் கொண்டாா்.
விருது குறித்து மருத்துவா் பினாய் ஜான் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது: தேசிய அளவில் இன்டா்வென்ஷனல் காா்டியாலஜி என்றழைக்கப்படும் நவீன இதய மருத்துவச் சிகிச்சை மூலம் திறந்தநிலை (ஓப்பன் சா்ஜரி) இதய அறுவை சிகிச்சையின்றி இதய ரத்த நாள அடைப்பைச் சீரமைப்பது, இதய வால்வுகளை சரி செய்தல், செயற்கை வால்வு பொருத்துதல் உள்ளிட்ட மருத்துவச் சிகிச்சை சாதனைகளுக்கென விருது வழங்கப்பட்டதாக மருத்துவா் பினாய் ஜான் செய்தியாளா்களிடம் கூறினாா்.