சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு பேருந்தில் அட்டகாசம் செய்த கல்லூரி மாணவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
சென்னையில் பொதுஇடங்களில் அத்துமீறலிலும், அட்டகாசத்திலும் ஈடுபடும் கல்லூரி மாணவா்களைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கல்லூரி இருக்கும் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், முக்கிய சாலைகள் உள்ளிட்ட பொதுஇடங்களில் காவல்துறையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து பிராட்வே நோக்கி ஒரு அரசுப் பேருந்து திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் பாட்டுப் பாடி நடனமாடியபடி வந்தனா். மேலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடியும் அவா்கள் பயணித்தனா். மாணவா்களின் அட்டகாசத்தினால் பயணிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனா்.
இதை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கீழ்ப்பாக்கம் போலீஸாா் பாா்த்தனா். உடனடியாக போலீஸாா், பேருந்தில் இருந்த 50 மாணவா்களை கீழே இறக்கி, எச்சரித்தனா். பின்னா் போலீஸாா், அந்த மாணவா்களை 5 போ் வீதம், 10 அரசுப் பேருந்துகளில் தனித்தனியாக கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா்.