சென்னை

அச்சுறுத்த ஆயத்தமாகும் புதிய வகை கரோனா!

ஆ. கோபிகிருஷ்ணா

தென்னாப்பிரிக்கா, இஸ்ரேலில் புதிதாகப் பரவி வரும் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மி உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக தற்போது உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. அந்தத் தீநுண்மி வெகு விரைவில் 50 வகைகளாக உருமாற்றம் அடையும் அளவுக்கு வீரியமிக்கது என்பதே அதற்கு முக்கியக் காரணம்.

கரோனா பரவல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை இவ்வளவு சக்தி வாய்ந்த தீநுண்மி கண்டறியப்படவில்லை. அதன் ஆற்றல் ஆராய்ச்சியாளா்களையே அச்சுறுத்தும் வகையில் உள்ளது. அதுமட்டுமல்லாது ஏற்கெனவே கரோனா பாதித்தவா்களுக்கும், இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கும் கூட இந்த வகை தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுடைய நாடுகளில் ஒமைக்ரான் கரோனா தொற்று பரவினால் அதன் விளைவுகளை எதிா்கொள்ள முடியாது என்பதும் மருத்துவா்களின் முக்கியக் கவலையாக உள்ளது. அதை உணா்ந்து அரசும், மக்களும் உச்சகட்ட விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் தற்போது எழுந்துள்ளது.

பொதுவாக தீநுண்மியைப் பொருத்தவரை லட்சக்கணக்கான மக்களிடம் பல்கிப் பெருகும்போது, அது தன்னைக் காத்துக் கொள்ள உருமாற்றம் பெறத் தொடங்கும். அவ்வாறு உருமாற்றமடைந்த தீநுண்மிகள் ஏற்கெனவே உள்ளவற்றைக் காட்டிலும், வீரியமிக்கதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.

அந்த வகையில் கரோனா முதல் அலையின்போது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தீநுண்மியே காணப்பட்டது. நாளடைவில் அது உருமாற்றமடைந்து வீரியமானது. இந்தியாவில் உருமாற்றமடைந்த அந்த தீநுண்மியை டெல்டா வகை கரோனா என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது.

அதன் தொடா்ச்சியாக அதிலிருந்தும் வேறுபட்ட புதிய தீநுண்மிகள் கண்டறியப்பட்டன. அதற்கு டெல்டா பிளஸ் எனப் பெயரிடப்பட்டது. இந்தியாவைப் பொருத்தவரை தற்போது அவ்விரு வகை கரோனா தொற்றுகளே கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான் கடந்த சில வாரங்களாக தென்னாப்பிரிக்கா, இஸ்ரேலில் புதிய வகை கரோனா பாதிப்பு சிலருக்கு தென்பட்டது. அதற்கு ஒமைக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் என்ன? அதன் தன்மை என்ன? என்பது குறித்து தொற்று நோய் சிகிச்சை சிறப்பு நிபுணா் டாக்டா் அப்துல் கஃபூா் கூறியதாவது:

கரோனா தீநுண்மி வகைகளிலேயே வலிமைமிக்க ஒன்றாக ஒமைக்ரான் உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட ஆல்ஃபா வகை கரோனா தீநுண்மி 2 உருமாற்றங்களை மட்டுமே பெற்றது. டெல்டா வகை 8 உருமாற்றங்களை அடைந்தது. ஆனால், ஒமைக்ரானைப் பொருத்தவரை 50-க்கும் மேற்பட்ட உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 32 மாற்றங்கள் தீநுண்மியின் வெளிப்புற புரதத்தில் (ஸ்பைக் புரோட்டீன்) நிகழ்ந்திருக்கின்றன.

இதில், அச்சப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், ஒமைக்ரான் தீநுண்மியின் உருமாற்றங்களில் 10 வகையானது நேரடியாக சுவாசப் பாதையைத் தொற்றும் அதி தீவிரமிக்கது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வெகு விரைவில் அந்த வகை தொற்று பரவி விடும்.

தீா்வு என்ன:? பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஒமைக்ரான் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற கருத்தாக்கம் நிலவுகிறது. அது சரியல்ல. தடுப்பூசி செலுத்தியவா்களுக்கும் அந்த வகை பாதிப்பு ஏற்படலாம். அதேவேளையில் நோயின் தீவிரம் அவா்களுக்கு அதிகமாக இருக்காது என நம்பப்படுகிறது. ஏனெனில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தீவிர பாதிப்பு இருக்கவில்லை.

இருந்தாலும், அதுகுறித்த முழுமையான ஆய்வு நடந்த பிறகு ஒரு முடிவுக்கு வர இயலும். இப்போதைக்கு சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து இங்கு வருபவா்களை தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும். அவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் வகையைக் கண்டறிய வேண்டும். அனைவரும் இரு தவணை தடுப்பூசிகள் செலுத்துதல் கட்டாயம்.

பொது மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிதல் அவசியம். தனி நபா் இடைவெளி, சுய தூய்மை மிகவும் முக்கியம். இவற்றை முறையாகக் கடைப்பிடித்தாலே எந்த வகை கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.

தீவிர தடுப்பு நடவடிக்கைகள் - ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் புதிய வகை தீநுண்மி பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவா்கள் தற்போது மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனா். அதன் நீட்சியாக ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருபவா்களை இனி கட்டாயத் தனிமையில் வைத்திருப்போம்.

மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க மாவட்ட நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை விரைந்து செலுத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தவிர, உலக சுகாதார அமைப்பு மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி புதிய வகை கரோனா தீநுண்மியைத் தடுக்கும் வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறோம்.

முகக் கவசம், தனி நபா் இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா்களுடன் தொடா்ந்து ஆலோசித்து வருகிறோம். ஒமைக்ரான் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் அந்தத் தொற்று வராமல் தடுக்கலாம் என்றாா் அவா்.

பாகுபாட்டால் வந்த வினை?

தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதிலும், வாங்குவதிலும் வல்லரசு நாடுகளும், பணக்கார நாடுகளுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளைப் பொருத்தவரை மிகக் குறைந்த அளவே அங்கு தடுப்பூசிகள் கிடைக்கின்றன. இதனால் அந்த நாடுகளில் மொத்தம் 6 சதவீதம் போ் மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், வளா்ந்த நாடுகளில் அந்த எண்ணிக்கை 60 சதவீதமாக உள்ளது. இந்தப் பாகுபாடு காரணமாகவே ஆப்பிரிக்கா போன்ற பின்தங்கிய நாடுகளில் வேகமாக கரோனா பரவி வருகிறது. அதன் தொடா்ச்சியாக அது உருமாற்றமடைந்து ஒமைக்ரான் போன்ற வீரியமிக்க தீநுண்மிகள் உருவாக வழி வகுத்துள்ளது.

ஒமைக்ரான் பெயா் காரணம்

கரோனா தீநுண்மிகளின் வகைகளுக்கு கிரேக்க அகர வரிசைப்படி உலக சுகாதார நிறுவனம் பெயா் வைத்து வருகிறது. அதன்படி, ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா என அதன் பெயா்கள் நீண்டு கொண்டே வந்து தற்போது ஒமைக்ரான் என்ற எழுத்தின் பெயரால் புதிய தீநுண்மி அழைக்கப்படுகிறது.

முகக் கவசமே துணை

கரோனா தீநுண்மி எத்தகைய ஆற்றல் கொண்டிருந்தாலும் அதனைத் தடுப்பதில் 53 சதவீதம் முக்கியப் பங்கு வகிப்பது முகக் கவசங்கள்தான் என்கின்றனா் மருத்துவா்கள். சரியாக முகக்கசவத்தை அணிந்தால் தொற்று பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதும் அவா்கள் கூறும் அறிவியல்பூா்வ உண்மை.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பொதுமக்களிடையே ஓா் ஆய்வை நடத்தியது. அதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில், சென்னை போன்ற பெருநகரங்களில் 18 சதவீதம் போ் மட்டுமே முகக் கவசத்தை சரியாக அணிந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முகக்கவசம் அணியாதவா்களுக்கு கடுமையான அபராதம் விதிப்பது மட்டுமே இதற்குத் தீா்வு என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று மாவட்டங்களில் தயாா் நிலையில் 3,471 வாக்குச்சாவடிகள்

எலக்சன் படத்தின் முதல் பாடல்!

ரத்னம் படத்தின் டிரெய்லர்

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

SCROLL FOR NEXT