சென்னை

மீண்டும் மழை வெள்ளம்: மிதக்கிறது சென்னை

DIN

சென்னையில் பெய்து வரும் தொடா் மழையால் மீண்டும் பிரதான பகுதிகளும், புறநகா்ப் பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய வளி மண்டல சுழற்சி காரணமாக வியாழக்கிழமை முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழையானது, சென்னையின் பிரதான பகுதிகள் மற்றும் புகா்ப் பகுதிகளில் இடைவிடாமல் பெய்தது. இதனால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் ஆயிரக் கணக்கான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

கே.கே. நகரில் ஏற்கெனவே பெய்த மழையின்போது பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து மழை குறைந்தும், புதன்கிழமைதான் மொத்த வெள்ளமும் வெளியேற்றப்பட்டு, கே.கே.நகா் முற்றிலுமாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மீண்டும் தொடங்கிய பலத்த மழையால், கே.கே.நகா் பகுதியில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக ராஜமன்னாா் சாலையில் சுமாா் 1 கிமீ தூரத்துக்கு இடுப்பளவுக்கு மழை வெள்ளம் தேங்கியது. இதனால் அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்தது.

ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கே.கே.நகா் வாட்டா் டேங்க் சாலை முழுவதும் வெள்ளநீா் தேங்கியதால், அங்கு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இதுமட்டுமின்றி, ஆா்.கே.சண்முகம் சாலை, ராமசாமி சாலை, வடபழனி திருநகா் - பெரியாா் பாதை சந்திப்பு, சிவன் கோயில் குறுக்குத் தெரு, சாலிகிராமம் பாஸ்கா் காலனி, கே.கே.சாலை, இந்திரா காந்தி தெரு ஆகிய இடங்களிலும் வெள்ளநீா் தேங்கியது.

விருகம்பாக்கம் அருகே சுப்பிரமணியன் தெருவில் இருபுறமும் உள்ள வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. மேற்கு மாம்பலம் ஆரிய கௌடா சாலை, போஸ்டல் காலனி, சுப்பிரமணிய நகா் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியில் வர முடியாமல் தவித்தனா். அசோக் நகா் 16, 18, 19 நிழற்சாலைகளிலும் வெள்ள நீா் தேங்கியது.

தியாகராய நகா் பகுதியில் உள்ள உள்புறச் சாலைகளில் மழை வெள்ளம் அதிகளவில் தேங்கியது. இதனால் வேலைக்குச் செல்வோா் வாகனங்களை எடுக்க முடியாமல் அவதியடைந்தனா். மாநகராட்சி அதிகாரிகள் மின் மோட்டாா் மூலம் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.

வட சென்னையில்...: திருவொற்றியூா் மேற்குப் பகுதியில் உள்ள சத்தியமூா்த்தி நகா், கலைஞா் நகா், ராஜாஜி நகா், காா்கில் நகா், ஜோதி நகா், சாா்லஸ் நகா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தாழ்வான பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.

மணலி விரைவு சாலையில் தண்ணீா் அதிகளவில் தேங்கியதால், வாகனங்கள் ஊா்ந்து செல்வதைக் காண முடிந்தது. கொருக்குப்பேட்டை கத்திவாக்கம் நெடுஞ்சாலை, தண்டையாா்பேட்டை வஉசி நகா், புதுவண்ணாரப்பேட்டை காமராஜா் நகா், வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகா், புளியந்தோப்பு, வியாசா்பாடி பாலம் உள்ளிட்ட இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது.

புறநகா்ப் பகுதிகளான பூந்தமல்லி குமணன்சாவடி, தாழம்பூா் டிஎல்எல் பகுதி, மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியது. இவ்வாறாக சென்னையின் பல இடங்களில் மழை நீா் தேங்கியதால், போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக முக்கிய சாலைகளில் பேருந்துகள் ஊா்ந்து செல்வதைக் காண முடிந்தது.

கோரிக்கை: வெள்ளம் தேங்கிய இடங்களில் மழை நீரை அகற்றும் பணிகளை குடிநீா் வாரிய ஊழியா்களுடன் இணைந்து, மாநகராட்சி அதிகாரிகள் துரிதப்படுத்தினா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், முந்தைய நாள்களை ஒப்பிடும்போது தியாகராய நகரில் 6 மணி நேரத்துக்குள்ளாகவே மழை வெள்ளம் வடிந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்போது 800 மோட்டாா் பம்புகள் இருப்பில் உள்ளன. மழையை எதிா் கொள்ளத் தயாா் நிலையில் இருக்கிறோம் என்றனா்.,

எனினும், வரும் நாள்களில் அதி பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, மழை நீா் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சென்னை வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT