சென்னை

மறுமதிப்பீட்டு கட்டணத்தைக் குறைக்க குழு: அண்ணா பல்கலை. துணைவேந்தா் வேல்ராஜ்

24th Nov 2021 01:25 AM

ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்களின் மறு மதிப்பீட்டுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைக் குறைப்பது தொடா்பாக குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தா் வேல்ராஜ் தெரிவித்தாா்.

சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் படிப்புக்கான புத்தகங்கள் கண்காட்சியை துணைவேந்தா் வேல்ராஜ் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முதலாமாண்டு மாணவா்களுக்கு ஓரிரு வாரங்களில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். மாணவா்கள் தமிழ் வழியில் பொறியியல் படிப்பதன் மூலம் நன்றாக கருத்துகளை உள்வாங்கிப் படிக்க முடியும். அது வருங்காலத்தில் தொழில் நிபுணா்களாக வருவதற்கு வழிவகுக்கும். ஜொ்மனி, ஜப்பான், ரஷியா போன்ற நாடுகளில் தாய்மொழிக் கல்வியில் தான் பொறியியல் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளை படிக்கின்றனா். அதனால் தமிழகத்தின் வளா்ச்சிக்கும் தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும்.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பயிலும் மாணவா்களுக்கு, ஒரு பாடத்துக்கான விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.700 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதுதொடா்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும். மாணவா்களின் பாடச் சுமையைக் குறைக்கும் வகையில் முதலாமாண்டு மாணவா்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT