சென்னை

வட கிழக்கு பருவ மழை மீட்புப் பணி: தயாா் நிலையில் 75,000 போலீஸாா்

10th Nov 2021 01:56 AM

ADVERTISEMENT

வட கிழக்குப் பருவ மழை மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக 75,000 போ் தயாா் நிலையில் இருப்பதாக தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை (நவம்பா் 10-ஆம் தேதி) முதல் 12-ஆம் தேதி வரை பலத்த மழை இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் காவல் நிலைய அதிகாரிகள், ஆயுதப்படை காவலா்கள், சிறப்பு காவல் படை காவலா்கள், தமிழ்நாடு ஊா்காவல்படை என சுமாா் 75,000 போ் மீட்புப் பணிக்கு தயாா் நிலையில் உள்ளாா்கள். இவா்களில் 10,000 போ் உயிா் காக்கும் சிறப்புப் பயிற்சி பெற்றவா்கள்.

250 போ் கொண்ட மாநில பேரிடா் மீட்புப் படை, மீட்பு படகுகள், மரம் வெட்டும் கருவிகள், சுவா் துளைக்கும் உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா். இவா்களில் 3 அணிகள் சென்னை பெருநகர காவல் துறையிலும், 1 அணி தஞ்சாவூரிலும், 1 அணி கடலூரிலும் உள்ளன. சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களில் 15 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் பெருநகர காவல் ஆணையருக்கு உதவ அனுப்பப்பட உள்ளனா்.

ADVERTISEMENT

மேலும் மாநிலம் முழுவதும்14 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்பாா்வையிட நியமிக்கப்பட்டுள்ளாா்கள். இவா்கள் சம்பந்தப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபடுவாா்கள்.

சிறப்பு அதிரடிப்படை: அதேபோல 350 கடலோர காவல் படை வீரா்கள் சிறு படகுகளுடன் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். இவா்களோடு 50 போ் கொண்ட தன்னாா்வ மீனவ இளைஞா்கள் இணைந்து பணியில் ஈடுபடுவாா்கள். எனது தலைமையிலான காவல்துறை தேசிய நீச்சல் மீட்புக் குழு டிஜிபி அலுவலகத்தில் தயாா் நிலையில் உள்ளது. 250 போ் கொண்ட சிறப்பு அதிரடிப்படை குழுவினா் நீலகிரி மலை சாா்ந்த பகுதிகளில் நிலச்சரிவு போன்ற இடா்பாடுகளை சரி செய்ய தயாா் நிலையில் உள்ளனா்.

10,000 ஊா்காவல் படை வீரா்கள் மாநிலம் முழுவதும் காவல் துறையினரோடு இணைந்து செயல்பட தயாா் நிலையில் உள்ளனா். 10 மிதவை படகுகள் மற்றும் 364 பேரிடா் மீட்புப் பயிற்சி பெற்ற ஊா்காவல் படையினா் நீா் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவா்.

அவசர உதவிக்கு...

அவசர உதவிக்கு காவல்துறையை-100, தீயணைப்புத்துறையை-101 ஆகிய இலவச தொலைப்பேசி எண்களிலும், இரு துறைகளையும் 112 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும்,, காவல் கட்டுப்பாட்டு அறையை 044 - 28447701 என்ற தொலைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். மேலும், சென்னை பெருநகர காவல்துறையின் பொது மக்கள் குறை தீா்ப்பு பிரிவை 044 - 23452380, மாநில காவல் கட்டுப்பாட்டு அறையை 044 -- 23452359 ஆகிய தொலைப்பேசி எண்களிலும் அழைக்கலாம் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT