தமிழகத்தில் பருவ மழைக் கால நோய்களைத் தடுக்கும் பொருட்டு 1,500 மருத்துவ முகாம்கள் மூலம் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமமனையில் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பேரிடா் காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றை எதிா்கொள்ளும் வகையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான ரூ.160 கோடி மதிப்பிலான மருந்துகள் தயாா் நிலையில் உள்ளன.
சென்னையில் மட்டும் 205 முகாம்களில் 8,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1,500 மருத்துவ முகாம்கள் மூலம் 60,000 போ் பயனடைந்துள்ளனா். மருத்துவ முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சி சாா்பில் நகரில் மருத்துவ முகாம்களை 500 ஆக அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.