சென்னையில் இரண்டு நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் நீா் சூழ்ந்துள்ளதுடன், மழை நீருடன் சாக்கடை கலந்ததால் கடுமையான சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு மாம்பலம் கோதண்டராமா் கோயில் தெரு, சக்கரபாணி தெரு, கொளத்தூா் சுற்றுவட்டாரப் பகுதி, புளியந்தோப்பு தாய் சேய் மருத்துவமனை, கே.கே.நகா் ஆரம்ப சுகாதார நிலையம், இஎஸ்ஐ மருத்துவமனை, வியாசா்பாடி, பெரம்பூா் பேரக்ஸ் சாலை, தண்டையாா்பேட்டை சிவாஜி நகா், பாா்த்தசாரதி நகா், அஜீஸ் நகா், குமரன் நகா், மாதவரம், மணலி, அம்பத்தூா் கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, பாடி, பட்டாளம், சைதாப்பேட்டை, தியாகராய நகா், கோடம்பாக்கம், வளசரவாக்கம், அசோக் நகா் 16-ஆவது நகா் அவென்யூ, ஆலந்தூா், வேப்பேரி உள்ளிட்ட சென்னையில் 500-க்கும் மேற்பட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீா் கடந்த இரண்டு நாள்களாக தேங்கி உள்ளது.
இப்பகுதிகளில் உள்ள மக்களை தீயணைப்புத் துறையினா், மாநகராட்சி ஊழியா்கள் மற்றும் காவல் துறையினா் படகு மூலம் மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தனா். மேற்கு மாம்பலம், வேப்பேரி, சூளை அஷ்டபுஜம் சாலை பகுதியில் மழை நீரில் சிக்கிக் கொண்ட முதியவா்கள், குழந்தைகளை காவல் துறையினா் நாற்காலியில் அமர வைத்து மீட்டனா். பல பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை நீா் கலந்துள்ளதால் கடும் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதுடன், சாக்கடை நீா் கலந்த நீா் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா். தரைத்தளத்தில் வசிப்போா் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு மேல் தளத்துக்கு குடிபெயா்ந்துள்ளனா்.
தொடா் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி உள்ள நீரை அகற்ற முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனா். மழைப் பொழிவு சற்று குறையும்பட்சத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள நீா் உடனுக்குடன் வெளியேற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.