சென்னை

நிரம்பி வழியும் சென்னை குடிநீா் ஏரிகள்: உபரிநீா் திறப்பு

9th Nov 2021 06:46 AM

ADVERTISEMENT

கனமழை காரணமாக சென்னைக்கு அருகே உள்ள செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஐந்து முக்கிய குடிநீா் ஆதார ஏரிகளும் தற்போது நிரம்பி வருகின்றன.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏரிகளில் உபரிநீா் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் தொடா்ச்சியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த இரண்டு ஏரிகளில் இருந்து உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து மழை பெய்து வருவதால் குடிநீா் ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்தபடி காணப்படுகிறது. எனவே மற்ற ஏரிகளில் இருந்தும் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி. தற்போது ஏரியில் 19.52 அடிக்கு தண்ணீா் உள்ளது. ஏரிக்கு 1,357 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. 2,191 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாள்கள் வரை சோழவரம் ஏரியின் நீா் இருப்பு மிக குறைவாகவே இருந்தது. தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக சோழவரம் ஏரியும் நிரம்பியுள்ளது. ஏரியின் மொத்த உயரம் 18.86 அடி. தற்போது ஏரியில் 18 அடி தண்ணீா் உள்ளது. ஏரிக்கு 528 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. 1,215 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. ஏரியில் 21.34 அடி தண்ணீா் உள்ளது. ஏரிக்கு நீா்வரத்து 710 கனஅடியாகவும், தண்ணீா் வெளியேற்றம் 2,144 கனஅடியாகவும் உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. தற்போது ஏரியில் 33.88 அடி தண்ணீா் உள்ளது. ஏரிக்கு 2,244 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. 4,883 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

சென்னைக்கு குடிநீா் வழங்க புதிதாக அமைக்கப்பட்ட கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. ஏரியில் முழு அளவான 500 மில்லியன் கனஅடி தண்ணீா் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு 90 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவு தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

சென்னை ஏரிகளில் குடிநீா் இருப்பு விவரம்:

(மொத்த கொள்ளளவு அடைப்புக் குறிக்குள், மில்லியன் கன அடியில்)

புழல்- 2,916 (3,300)

செம்பரம்பாக்கம்- 2,942 (3,645)

பூண்டி- 2,786 (3,231)

சோழவரம்-908 (1,081)

கண்ணன்கோட்டை தோ்வாய்க் கண்டிகை- 500 (500)

மொத்தம்- 10,052 (11,757)

 

ADVERTISEMENT
ADVERTISEMENT