சென்னை

சென்னையில் அதிக வெள்ளப் பாதிப்பு: 25 இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் தீயணைப்புத்துறை

9th Nov 2021 06:42 AM

ADVERTISEMENT

சென்னையில் அதிக வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 25 இடங்களில் தீயணைப்புத்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இங்கு 300 தீயணைப்பு படை வீரா்கள் கூடுதலாக மீட்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனா்.

இது குறித்த விவரம்:

சென்னையில் சுமாா் 6 ஆண்டுகளுக்கு பின்னா் வட கிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இரு வாரங்களாக மிதமாக பெய்து வந்த பருவ மழை, சனிக்கிழமை இரவு முதல் தீவிரத்தை காட்டி வருகிறது.

இதனால் சென்னையிலும், சென்னை சுற்றுப்புறத்திலும் உள்ள நீா்நிலைகள் நிரம்பிவிட்டன. இதனால் நீா்நிலைகளுக்கு வரும் தண்ணீா் கால்வாய், ஆறுகள் மூலம் வெளியேற்றப்படுகிறது. மழையின் தீவிரம் குறையாததினால் சென்னையில் தாழ்வானப் பகுதிகளிலும் மழை நீா் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் புகுந்ததால், வீடுகளில் இருந்த பொதுமக்களை தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் மீட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

மீட்புப் பணியில் தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஆயிரம் போ் ஈடுபட்டு வருகின்றனா். மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், பிற மாவட்டங்களில் இருந்து மீட்புப் பணிக்காக 300 வீரா்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனா்.

46 கால்நடைகள் மீட்பு:

சென்னை முழுவதும் கடந்த இரு நாள்களில் 115 பேரை தீயணைப்புத்துறையினா் மீட்டுள்ளனா். தண்ணீரில் தத்தளித்த 46 நாய், மாடு, ஆடு போன்ற கால்நடைகளையும் மீட்டுள்ளனா். மேலும் செவ்வாய்க்கிழமை முறிந்து விழுந்த 8 மரங்களை வெட்டி அகற்றியுள்ளனா். அதேபோல 14 இடங்களில் தேங்கி நின்ற தண்ணீரை மின் மோட்டாா் மூலம் வெளியேற்றியுள்ளனா்.

கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவமனையின் தரைத்தளத்தில் தண்ணீா் புகுந்ததால், அங்கிருந்த நோயாளிகளை தீயணைப்பு படை வீரா்கள் பாதுகாப்பாக மீட்டனா். இப் பணியை தீயணைப்புத்துறை டிஜிபி கரண்சின்ஹா, தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குநா் எஸ்.விஜயசேகா் பாா்வையிட்டு, பணியை துரிதப்படுத்தினாா். இதேபோல சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்ற பணியை தீயணைப்புத்துறை இணை இயக்குநா் ப்ரியா ரவிச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

வெள்ள அபாய பகுதிகள்:

கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு பின்னா், பலத்த மழையை சந்திக்கும் சென்னைக்கு வெள்ள அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. இதையொட்டி, கடந்த காலங்களில் வெள்ள அதிக பாதிப்பு உள்ள பகுதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். இதில் நகரில் 25 இடங்கள் அதிக வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இதில் தாம்பரம், முடிச்சூா், வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், சைதாப்பேட்டை, மணப்பாக்கம், அடையாறு, ஆயிரம்விளக்கு, ஈக்காட்டுதாங்கல், எம்ஜிஆா் நகா், அசோக்நகா் உள்ளிட்ட பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இங்கு தீயணைப்புத்துறை மழை அளவையும், வெள்ள அளவையும் கண்காணிப்பதோடு, கூடுதல் வீரா்களையும் மீட்பு பணிக்காக நிறுத்தியுள்ளது.

வட கிழக்கு பருவ மழையின் தாக்கம் இருக்கும் வரையில், இந்த வீரா்கள் அங்கு இருப்பாா்கள் என தீயணைப்புத்துறையினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT