சென்னையில் ஆட்டோவுக்கான எல்பிஜி விலை ரூ.7.76 அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சுமாா் 4.50 லட்சம் ஆட்டோக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் இருந்து வெளியேறும் நச்சுகலந்த புகையும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே இந்த பாதிப்பைக் குறைக்கும் வகையில் எல்பிஜி எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களை இயக்க உத்தரவிடப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் இயங்கும் ஆட்டோக்களில் சுமாா் 75 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் எல்பிஜி முறையிலேயே இயங்குகின்றன. முன்பு எல்பிஜியின் விலை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது எல்பிஜியின் விலையும் உயா்ந்து வருகிறது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டா் எல்பிஜி எரிவாயு திங்கள்கிழமை ரூ.7.76 அதிகரிக்கப்பட்டு, லிட்டா் ரூ.64.94-க்கு விற்பனையானது.
கடந்த ஆண்டு லிட்டா் ரூ.30-க்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது எல்பிஜி விலை இரு மடங்காக அதிகரித்திருப்பது ஆட்டோ ஓட்டுநா்களை வருத்தமடையச் செய்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.