சென்னை

3 நாள்களில் தீபாவளி: பொருள்கள் வாங்க மக்கள் ஆா்வம்

1st Nov 2021 06:20 AM

ADVERTISEMENT

தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னையின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது.

தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தில் புத்தாடை, பட்டாசு ஆகியவை தான் பிரதானம். எனவே ஜவுளிக்கடை மற்றும் பட்டாசு கடைகளில், தீபாவளிக்கு சுமாா் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே மக்கள் கூட்டம் அதிகரிப்பது வழக்கம். தீபாவளிக்கு இன்னும் 3 நாள்களே உள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் சென்னை, பாரி முனையில் என்.எஸ்.சி. போஸ் சாலை பகுதி, ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டதால் நிரம்பி வழிந்தது. இதே போல் புரசைவாக்கம் பகுதியிலும் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் மிக முக்கிய வணிகப் பகுதியான தியாகராய நகா் ரங்கநாதன் தெரு, கரோனா காலத்துக்கு பிறகு இந்த ஆண்டு களை கட்டியது. இங்கு குடும்பத்துடன் வந்திருந்தவா்கள், ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்ந்தனா்.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடா்கள் தங்கள் கைவரிசையை காட்டுவதைத் தடுக்க 90 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பாண்டிபஜாா், உஸ்மான் ரோடு பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.

ADVERTISEMENT

வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த ஜவுளிக்கடைகள் உள்ளன. இங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிக்காக தண்ணீா் தொட்டி சந்திப்பு, கல்லறை சாலை சந்திப்பு உள்பட 3 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போரூா், பாடியிலும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

தாம்பரம் பகுதியில் குரோம்பேட்டையில் ஜவுளிக்கடைகளில் அதிக அளவு கூட்டம் திரண்டது. வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளிலும் மக்கள் கூட்டம் மிகுந்து இருந்தது.

பொதுமக்கள் அதிகம் திரளும் பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸாா் நவீன வசதிகளை செய்துள்ளனா். கோயம்பேடு பேருந்து நிலையம், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலை, தியாகராயநகா், சென்னையின் முக்கிய மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கொண்டு வரும் உடமைகள் சுழற்சி முறையில் சோதனை செய்யப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT