சென்னை

இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்

4th May 2021 04:43 AM

ADVERTISEMENT


சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய், புதன் (மே 4 ,5) ஆகிய நாள்கள்  இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:
கேரளம்,  அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய், புதன்கிழமை  (மே 4, 5) ஆகிய இரு நாள்கள் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 
மே 6, 7: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள்  மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
வெப்பநிலை அதிகரிக்கும்: தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக, மாலை முதல் மறுநாள் காலை வரை வெப்பமாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும் என்றார்.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 110 மி.மீ., தென்காசி,  நீலகிரி மாவட்டம் அலகாரி எஸ்டேட், கோத்தகிரி  எஸ்டேட்டில் தலா 70 மி.மீ., நீலகிரி மாவட்டம் பர்லியாரில் 60 மி.மீ., தேனி மாவட்டம் பெரியகுளம், நாகப்பட்டினத்தில் தலா 50 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சிவகங்கையில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT