சென்னை

முகக்கவசம் அணியாதவர்களுக்கு வாக்களிக்க அனுமதி இல்லை: மாவட்டத் தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ்

16th Mar 2021 06:40 AM

ADVERTISEMENT


சென்னை: வாக்குப் பதிவின்போது முகக்கவசம் அணியாமல் வந்தால் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க கூடுதலாக 96 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த பறக்கும் படைகளை ரிப்பன் மாளிகையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் கூறியது:

16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க தொகுதிக்கு 3 பறக்கும் படை குழுக்கள், 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் ஒரு விடியோ கண்காணிப்பு குழு என  48 பறக்கும் படைக் குழுக்கள், 48 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 16 விடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியைத் தீவிரப்படுத்தும் வகையில் கூடுதலாக 96 பறக்கும் படை குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

சென்னை மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்கும் வகையில் 1.20 லட்சம் விண்ணப்பங்கள் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில், இதுவரை பூர்த்தி செய்யப்பட்ட 8 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வாக்குப் பதிவின்போது, வாக்காளர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். 

அவ்வாறு இல்லையென்றால் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டாது. வாக்குச்சாவடி மையங்களில் குறிப்பிட்ட அளவே முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும். எனவே, வாக்காளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். இதைக் கண்காணிக்கவும், கைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கவும், உடல் வெப்பநிலையைக் கண்டறியவும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் இரண்டு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதுவரை 3.15 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை பறக்கும் படையினரால் 93 மூட்டை சேலைகள், 32 மூட்டை பாத்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ஃபெர்மி வித்யா, உதவி ஆணையாளர் ஜி.குலாம் ஜினானி பாபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT