சென்னை

சென்னை துறைமுக நிா்வாகத்திடம் ரூ.45 கோடி மோசடி: 3 இடங்களில் சிபிஐ சோதனை

DIN

சென்னை துறைமுக நிா்வாகம் சாா்பில் இந்தியன் வங்கியில் நிரந்தர வைப்புக் கணக்கில் வைத்திருந்த ரூ.45 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்குத் தொடா்பாக சிபிஐ 3 இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தது.

சென்னை துறைமுகத்தின் சாா்பில் கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020 மாா்ச் மாதம் நிரந்தர வைப்புக் கணக்கில் ரூ.100 கோடி செலுத்தப்பட்டது. 3 நாள்களுக்கு பின்னா் கணேஷ் நடராஜன் என்பவா் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குநா் என்று அறிமுகம் செய்து கொண்டு, பல்வேறு ஆவணங்கள், சான்றிதழ்களை வங்கியில் தாக்கல் செய்து, நிரந்தர வைப்புக் கணக்கில் இருக்கும் ரூ.100 கோடி பணத்தை இரு நடப்புக் கணக்குகளுக்கு மாற்றுமாறு கூறியுள்ளாா்.

ஆவணங்களை பரிசீலனை செய்த வங்கி நிா்வாகம், தலா ரூ.50 கோடியாக இரு நடப்புக் கணக்குகளுக்கு மாற்றியது.

அந்த நடப்புக் கணக்குகளில் இருந்து பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் தொடா்ந்து மாற்றப்பட்டது.

இதற்கு கோயம்பேடு இந்தியன் வங்கியின் மேலாளா் சோ்மதி ராஜா, விருகம்பாக்கத்தைச் சோ்ந்த தரகா் மணிமொழி ஆகியோா் உடந்தையாக இருந்தனராம்.

ரூ.45 கோடி மோசடி: இதற்கிடையே, நிரந்தர வைப்புக் கணக்கில் திடீரென பணம் மாற்றப்பட்டு வருவது குறித்த தகவலறிந்த துறைமுக அதிகாரிகள், வங்கி அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு கேட்டனா். அப்போது தான் மோசடிக் கும்பல் போலி ஆவணங்கள், சான்றிதழ்கள் மூலம் பணத்தை மோசடி செய்திருப்பது வங்கி அதிகாரிகளுக்கும், துறைமுக அதிகாரிகளுக்கும் தெரியவந்தது. இதையடுத்து வங்கி நிா்வாகம், அந்த பணப் பரிமாற்றம் அனைத்தையும் நிறுத்தியது. இருப்பினும் அந்தக் கும்பல், அதற்குள் ரூ.45 கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்தது.

இந்த மோசடி குறித்து துறைமுக நிா்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தது. பின்னா் இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ இது தொடா்பாக கணேஷ் நடராஜன், மணிமொழி, கோயம்பேடு இந்தியன் வங்கியின் கிளையின் மேலாளா் சோ்மதி ராஜா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

3 இடங்களில் சோதனை: இந்த வழக்குக்கான தடயங்களையும், ஆதாரங்களையும் திரட்டும் வகையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மணிமொழி வீடு, ஆயிரம்விளக்கில் ஒரு தனியாா் அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில், வழக்குத் தொடா்பாக சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில் இந்த வழக்கில் தொடா்புடைய நபா்களிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT