சென்னை

வைத்தீஸ்வரன் கோயில் யானை குளத்தில் ஆக்கிரமிப்புகள்: தமிழக அரசுக்கு உத்தரவு

12th Jul 2021 12:09 PM

ADVERTISEMENT

வைத்தீஸ்வரன் கோயில் யானை குளத்தில் ஆக்கிரமிப்புக்கள் கண்டறியப்பட்டால் அவற்றை அகற்ற சட்டப்படியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வைத்தீஸ்வரன்கோவிலைச் சேர்ந்த சேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில், உலகப் புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. 

இக் கோயிலைச் சுற்றி, நீரை சேகரிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் ஏராளமான குளங்கள் வெட்டப்பட்டுள்ளது.

கோயில் யானைகளை குளிக்கச் செய்வதற்காக 4 ஏக்கர் பரப்பில் வெட்டப்பட்ட யானை குளத்தில், தற்போது 3 ஏக்கர் பரப்பு வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்றக் கோரி  அதிகாரிகளுக்கும், முதல்வரின் தனிப் பிரிவுக்கும்  பலமுறை புகார் மனுக்கள் அனுப்பினேன். 

ADVERTISEMENT

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  மனுதாரரின் கோரிக்கை மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டனர்.

ஆக்கிரமிப்புக்கள் கண்டறியப்பட்டால் அவற்றை அகற்ற சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : high court
ADVERTISEMENT
ADVERTISEMENT