சென்னை

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

12th Jul 2021 12:23 PM

ADVERTISEMENT

வேட்புமனுவில் தவறான தகவல்களைத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமமூர்த்தி என்ற வாக்காளர் தாக்கல் செய்த மனுவில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளரிடம் 1091 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

கே.சி.வீரமணி தனது வேட்பு மனுவிலும், பிரமாண பத்திரத்திலும் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். எனவே வேட்புமனுவில் தவறான தகவல்களைத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, தனது வேட்புமனுவில் தவறான பான் அட்டை எண்ணை குறிப்பிட்டுள்ளார். அவரது சொத்து விவரங்கள், வருமானவரி கணக்குடன் ஒத்துப்போகவில்லை.

ADVERTISEMENT

எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். ஆனால் இதுவரை  நடவடிக்கை எடுக்கவில்லை என  தெரிவிக்கப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில், இதுதொடர்பாக குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி, மனுதாரரின் புகார் மனுவை முடித்து வைத்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கடந்த 1966-ஆம் ஆண்டுக்கு முன், வேட்புமனுவில் தவறான தகவல்கள் அளிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையமே புகார் அளித்து வந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக யார் வேண்டுமானாலும் குற்ற நடவடிக்கை எடுக்க வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, தேர்தல் ஆணையம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT