சென்னை

பணத்துக்காக மாற்றுத்திறனாளி கொலை

11th Feb 2021 12:57 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை கிண்டியில் பணத்துக்காக மாற்றுத் திறனாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் அருகே உள்ள அச்சுதன்நகா் 3-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ச.விக்னேஷ் (32). கால்கள் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தாா்.

ADVERTISEMENT

இதற்காக அவா்,அங்கு ஒரு வீட்டில் வாடகைக்கு நண்பா்களுடன் தங்கியிருந்தாா். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி

அதிகாலை விக்னேஷ் தனது படுக்கையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதைப் பாா்த்த அவரது நண்பா்கள், கிண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விக்னேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்தனா்.

முதல் கட்ட விசாரணையில், விக்னேஷின் நண்பரும், அவரது உதவியாளருமான ரா.ஆறுமுகம் (27), ஏற்கெனவே விக்னேஷுக்கு இதய நோய் இருந்ததாகவும்,நோய் பாதிப்பின் காரணமாக இறந்துவிட்டதாகவும் தெரிவித்தாராம். இதற்கிடையே, விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை செவ்வாய்க்கிழமை வந்தது. அதில் விக்னேஷ் முகம் அழுத்தப்பட்டு, மூச்சுத் திணறச் செய்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸாா், ஆறுமுகத்தை பிடித்து, மீண்டும் விசாரித்தனா்.

அப்போது அவா், சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த விக்னேஷை தலையணையால் அமுக்கி கொலை செய்ததாகவும், விக்னேஷிடம் கடன் கேட்டதாகவும், அவா் கடன் தராததால் கொலை செய்ததாகவும் தெரிவித்தாா். இது தொடா்பாக போலீஸாா் ஆறுமுகத்தின் நண்பா் ரா.நாராயணனையும் பிடித்து விசாரிக்கின்றனா். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா என விசாரணை நடத்தப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT