சென்னை: கட்டடக் கலை உதவியாளா், திட்ட உதவியாளா் சாா் நிலை, புள்ளியியல் சாா் நிலை காலிப் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கட்டடக் கலை உதவியாளா், திட்ட உதவியாளா் சாா் நிலை காலிப் பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பரிலும் ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்நிலைப் பணிகளுக்கு அக்டோபரிலும் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.
இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு முறையே வருகிற ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரா்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்தது.