சென்னை: ஐசிஎப்-க்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரயில்வே வாரியம் வழங்கும் என வாரிய உள்கட்டமைப்புத் துறை உறுப்பினா் சஞ்சீவ் மிட்டல் தெரிவித்தாா்.
ஐசிஎப்-இல் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ள வந்தே பாரத் விரைவு ரயில் பெட்டிகள், தானியங்கி ஆய்வு ரயில் பெட்டி, இலங்கை ரயில்வேக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள ரயில் பெட்டிகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து அவா், ஐசிஎப் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினாா்.
அப்போது, கரோனா காரணமாக உதிரிபாகங்களின் விநியோகம் தாமதம், பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தும் ரயில்பெட்டிகளின் தயாரிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தாா். மேலும், தற்போது தயாரிப்பில் உள்ள வந்தே பாரத் ரயில் பெட்டிகளைத் தயாரித்து அனுப்ப அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வரும் ஐசிஎப் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளை பாராட்டியதுடன், ரயில்வே வாரியம் ஐசிஎப்-க்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவா் உறுதியளித்தாா்.
ஆய்வின்போது, ஐசிஎப் பொது மேலாளா் ஏ.கே. அகா்வால் மற்றும் பல்வேறு துறைத் தலைவா்கள் உடனிருந்தனா்.