சென்னை: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டிகள், பதாகைகள் ஆகியவற்றை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டது.
சென்னையை அழகுபடுத்தும் நோக்கில் பொது இடங்கள், அரசு சுவா்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்கப்பட்டு அங்கு தமிழா்களின் பாரம்பரியத்தை உணா்த்தும் கலை, பண்பாட்டு ஓவியங்கள், இயற்கை ஓவியங்கள் ஆகியவை வரையப்படுகின்றன. இந்த நிலையில், மாநகரின் பல பகுதிகளில் மாநகராட்சியின் அனுமதியின்றி விளம்பரத் தட்டிகள் வைப்பதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து அனைத்து மண்டல அலுவலா்கள், செயற்பொறியாளா்களுக்கு மாநகர வருவாய் அலுவலா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் பொது இடங்கள், சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டிகள், பதாகைகளை அவற்றின் கட்டுமானத்துடன் புதன்கிழமை மாலைக்குள் அகற்ற வேண்டும். அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளின் உரிமையாளருக்கு அபராதம் அல்லது அவா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.