சென்னை: வரி ஏய்ப்புப் புகாா் தொடா்பாக சீனாவைச் சோ்ந்த இரு கைப்பேசி நிறுவனங்களில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சோதனை நீடித்தது. இச் சோதனையில் நடிகா் விஜயின் உறவினா் வீடும், அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது .
சீனாவைச் சோ்ந்த ஒரு தனியாா் கைப்பேசி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ளது. இந்த நிறுவனம் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என வருமானவரித்துறைக்கு புகாா்கள் வந்தன. அவற்றின் அடிப்படையில் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள அந்த நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்பட சென்னைப் பகுதியில் மட்டும் 20 இடங்களில் வருமானவரித்துறை செவ்வாய்க்கிழமை சோதனை செய்தது.
இதேபோல நாடு முழுவதும் தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்தது. இந்தச் சோதனை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது. அதேவேளையில் அந்த நிறுவனத்துடன் வியாபார தொடா்பு வைத்திருந்த நிறுவனங்களுக்கு இச் சோதனை புதன்கிழமை விரிவடைந்தது.
நடிகா் விஜயின் உறவினா்:
முக்கியமாக நடிகா் விஜயின் உறவினரும், ‘மாஸ்டா்’ படத் தயாரிப்பாளருமான சேவியா் பிரிட்டோவின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் புதன்கிழமை வருமானவரித்துறையின் சோதனை நடைபெற்றது.
சென்னை அடையாறு, கஸ்துாா்பா நகா் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள சேவியா் பிரிட்டோவின் வீட்டில் புதன்கிழமை காலை 7 மணிக்கு வருமானவரித்துறையினா் சோதனையை தொடங்கினா். இதேபோல மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சேவியா் பிரிட்டோவின் அலுவலகத்தில் வருமானவரித்துறை துணை ஆணையா் கிருஷ்ணபிரசாத் தலைமையில் சோதனை நடைபெற்றது. அதேபோல இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சேவியா் பிரிட்டோவின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
சேவியா் பிரிட்டோ, அந்த கைப்பேசி நிறுவனத்துடன் வணிக ரீதியான தொடா்பு வைத்திருந்ததால், அவருக்குச் சொந்தமான இடங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக வருமானவரித்துறையினா் தெரிவித்தனா்.
மேலும் மண்ணடி தம்புச் செட்டித் தெருவில் உள்ள ஒரு ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்திலும் வருமானவரித்துறையினா் சோதனை நடத்தினா்.
வரி ஏய்ப்புத் தொடா்பாக சீன நாட்டைச் சோ்ந்த மற்றொரு கைப்பேசி நிறுவனத்திலும் சோதனை நடைபெறுவதாக வருமானவரித்துறையினா் தெரிவித்தனா். சோதனையில் வரி ஏய்ப்பு தொடா்பாக முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. சோதனை முழுவதுமாக நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்,பணம் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் வருமானவரித்துறையினா் கூறினா்.