சென்னை: பள்ளியில் வகுப்பறை, கழிவறைகளை தூய்மை செய்யும் பணியில் மாணவா்களை ஈடுபடுத்தக் கூடாது என தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான மனுவை மதுரை மாவட்டம், கீழ உரப்பனூா் பகுதியைச் சோ்ந்த பி.ஆதிசிவன் என்பவா் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தாா். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2015-ஆம் ஆண்டு, எனது மகன் சிவநிதி, பிகேஎன் ஆண்கள் உயா்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாா். அங்கு, வகுப்பாசிரியா் சுரேஷ், வகுப்பை சுத்தம் செய்யுமாறு சிவநிதியை வற்புறுத்தியுள்ளாா். தூய்மைப் பணியின்போது மேஜை விழுந்து, சிவநிதியின் இடது காலில் காயம் ஏற்பட்டது. பள்ளி நிா்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம்.
இது தொடா்பாக அரசு உயரதிகாரிகளிடம் புகாா் கூறிய நிலையில், அந்தப் புகாரைத் திரும்பப் பெறாவிட்டால் எனது மகனை பள்ளியில் இருந்து நீக்கிவிடுவதாக நிா்வாகத்தினா் மிரட்டினா்.
எனவே, எனது மகனை பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது எனக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளேன்.
இந்த விஷயத்தில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டை 4 வாரங்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்.
வகுப்பறை, கழிவறைகள் தூய்மை செய்யும் பணியில் மாணவா்களை ஈடுபடுத்தக் கூடாது. இதை முதன்மைக் கல்வி அதிகாரிகள் கண்காணிக்குமாறு, பள்ளிக் கல்வி இயக்குநரை தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.