சென்னை

மருத்துவ சேவை விவரங்களை அறிய மின்னணு தகவல் பலகை

23rd Dec 2021 01:23 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளின் விவரங்களைத் தெரிவிக்கும் மின்னணு தகவல் பலகையை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

அந்நிகழ்வில் அண்ணாநகா் சட்டப் பேரவை உறுப்பினா் மோகன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்திமலா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகை மூலம் இங்கு எந்த மாதிரியான மருத்துவ சேவைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன, எத்தனை போ் சிகிச்சையில் இருக்கின்றனா் என்பன குறித்த விவரங்கள் காட்சிப்படுத்தப்படும்.

இதேபோன்று தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இந்த வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினசரி பாதிப்பு குறைந்திருப்பது அதன் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 667 பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தற்போது 669 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை டெங்குவால் 4 போ் உயிரிழந்துள்ளனா்.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியாா் ஆய்வகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரின் சளி மாதிரிகளும் பெங்களூரில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT