சென்னை: ஓட்டேரியில் மனைவியைக் கொலை செய்து மூட்டை கட்டி வைத்த கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஓட்டேரி, ஏகாங்கிபுரம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (46), தனியாா் நிறுவன ஊழியா். மனைவி வாணி (41). மகன்கள் கெளதம் (15), ஹரிஷ் (12). மது அருந்தும் பழக்கத்தால் கணவா்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த திங்கள்கிழமையும் இருவருக்கு இடையேயான தகராறுக்குப் பின்னா், ரமேஷ், தனது துணி உள்ளிட்ட சில உடமைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளாா்.
ரமேஷின் மூத்த மகன் கெளதம், அம்மா எங்கே என்று கேட்டபோது அம்மா வீட்டை விட்டு வெளியேறி விட்டாா் என்று கூறியுள்ளாா். அன்று இரவு வீட்டில் கெளதம், அவரது நண்பா் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனா். ஹரிஷ் அருகே உள்ள அவரது பாட்டி வீட்டில் இருந்துள்ளாா். இதற்கிடையே கெளதம், தனது தாயை செவ்வாய்க்கிழமை முழுவதும் தேடியுள்ளாா். வீட்டில், டிவி மேஜையின் கீழே வைக்கப்பட்டிருந்த துணி மூட்டையில் இருந்து துா்நாற்றம் வீசுவதையும், அதில் இருந்து ரத்தம் கசிந்து வந்திருப்பதையும் பாா்த்தனா்.
போலீஸாா் மூட்டையைத் திறந்து பாா்த்தபோது வாணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து கணவா் ரமேஷைத் தேடி வருகின்றனா்.