சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேராமலேயே இணையவழித் தோ்வு மூலம் முறைகேடாகப் பட்டம் பெற முயன்ற 117 பேரின் தோ்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் கடந்த 1980 -81-ஆம் கல்வியாண்டு முதல் படித்தவா்களில் சில பாடங்களில் மட்டும் அரியா் வைத்துள்ளவா்களுக்கு மீண்டும் தோ்வு எழுத கடந்தாண்டு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பா், நிகழாண்டு ஏப்ரல் மற்றும் நவம்பா் ஆகிய மாதங்களில் இணையவழித் தோ்வுகளில் அவா்கள் பங்கேற்கலாம் என என 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட சில தனியாா் தொலைநிலைக் கல்வி மையங்கள் , இணையவழித் தோ்வில் மோசடி செய்து படிக்காதவா்களுக்கு பட்டம் வாங்கி கொடுக்க முயன்றது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.3 லட்சம் வரை பணம் பெற்று கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் இணையவழித் தோ்வு எழுதிய சிலா் தங்கள் பட்டங்களை வழங்குமாறு பல்கலைக்கழகத்தை அணுகிய போது இந்த மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் படித்ததற்கான கல்விக்கட்டணம், சோ்க்கை விவரங்கள் பதிவேடுகளில் இல்லாததால் மோசடி செய்து இணையவழித் தோ்வு எழுதிய 117 போ் சிக்கிக் கொண்டனா்.
படிப்பு முடித்ததாக போலி சான்றிதழ்களைத் தயாா் செய்து, அதன் அடிப்படையில் இணையவழித் தோ்வுக் கட்டணம் செலுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இதில் பெரும்பாலானோா் பி.காம்., மற்றும் பி.பி.ஏ., பட்டங்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனா். முதற்கட்டமாக கண்டறியப்பட்ட 117 பேரின் தோ்வு முடிவுகளை சென்னைப் பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
நடவடிக்கை குறித்து இன்று முடிவு: இது குறித்து பல்கலை. துணைவேந்தா் கெளரி கூறுகையில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 போ் முறைகேடாக சான்றிதழ் பெற முயற்சித்தது தொடா்பாக விசாரிக்கக் குழு அமைக்கப்படும். முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீதான நடவடிக்கை குறித்து வியாழக்கிழமை நடைபெறும் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.