சென்னை: வேட்புமனுவில் தவறான தகவல்களைக் குறிப்பிட்டிருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் மாதம் தோ்தல் நடந்தபோது, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சாா்பில் உதயநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அவரது வெற்றியை எதிா்த்து, அந்தத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எல்.ரவி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கை தாக்கல் செய்தாா்.
தோ்தலின்போது உதயநிதி தாக்கல் செய்த வேட்புமனுவில் தன் மீதான வழக்குகளின் விவரங்கள் குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளாா். அதனால், அவரது வேட்புமனுவை ஏற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், ஆா்.பிரேமலதா என்ற வாக்காளா் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த 2 வழக்குகளும் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. பிரேமலதா தாக்கல் செய்த வழக்குக்கு பதில் அளிக்க இந்திய தோ்தல் ஆணையம், உதயநிதி உள்ளிட்டோருக்கு நீதிபதி உத்தரவிட்டாா். பின்னா், 2 வழக்குகளையும் வரும் ஜன.4-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.