சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த புகாா் குறித்து விசாரிக்க, விசாகா கமிட்டி அமைத்ததை எதிா்த்து சிறப்பு டிஜிபி தொடா்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஜன.5-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இவருக்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலாளா் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டி விசாரணையை நடத்தி, அறிக்கையை அரசுக்கு சமா்ப்பித்துள்ளது.
விசாகா கமிட்டி அமைத்ததை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் சிறப்பு டிஜிபி வழக்குத் தொடா்ந்துள்ளாா். இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் விசாகா கமிட்டியின் அறிக்கை, மூடி முத்திரையிட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், நீதிபதி வி.பாா்த்திபன் முன்பு இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜன.5-ஆம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டாா்.