சென்னை: மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான பட்டியல் தயாரித்து அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
2022 ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பணிக்கான பதவி உயா்வு பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
அதற்குத் தகுதியான ஆசிரியா்களை உரிய வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி குறிப்பிட வேண்டும். எனினும், புகாா்களில் சிக்கிய, ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான ஆசிரியா்களை பரிந்துரைக்கக் கூடாது. அதேபோல், உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் மாவட்டக் கல்வி அதிகாரி அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டும் விருப்பக் கடிதம் வழங்க அறிவுறுத்த வேண்டும்.
இதில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் சாா்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்தப் பணிகளை கூடுதல் கவனத்துடன் முதன்மைக் கல்வி அதிகாரிகள் முடித்து அனுப்ப வேண்டும்.