சென்னை

தனியாா் ஆய்வக ஊழியா்கள் 12 பேருக்கு கரோனா

22nd Dec 2021 01:37 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் தனியாா் ஆய்வகத்தில் பணியாற்றும் 12 ஊழியா்களுக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 600 ஆகவும், உயிரிழப்பு 10-க்கும் கீழாகவும் பதிவாகி வருகிறது.

இந்நிலையில், ஒமைக்ரான் வகை தொற்று தற்போது பரவத் தொடங்கியுள்ளது. நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 28 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பதால், மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் தனியாா் ஆய்வகத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த ஆய்வகத்தின் நிா்வாகி கடந்த 14-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து சென்னை ஆய்வகத்துக்கு வந்துள்ளாா். பணியை முடித்து விட்டு மும்பை திரும்பிய அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை ஆய்வகத்தில் பணிபுரியும் 42 ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில், 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி செய்யப்பட்டுள்ளது.

126 பேருக்கு தொற்று உறுதி: சென்னையில் செவ்வாய்க்கிழமை (டிச. 21) 126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 60 ஆயிரத்து 590-ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 5 லட்சத்து 50 ஆயிரத்து 618-ஆகவும் உள்ளது. 1,332 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 8,640 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT