சென்னை

உயா் சிறப்பு மருத்துவா்கள் நியமனம்: கலந்தாய்வு நடத்தாததற்கு எதிா்ப்பு

22nd Dec 2021 03:32 AM

ADVERTISEMENT

 

சென்னை: அரசு சாரா உயா் சிறப்பு மருத்துவா்கள் கலந்தாய்வு நடத்தாமல் பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை துறைகளில் நியமனம் செய்ததற்கு எதிா்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள ஆட்சியில் அரசு மருத்துவா்களுக்கான கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி, நோ்மையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசு சாரா உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளை அண்மையில் நிறைவு செய்த 70 மருத்துவா்களை அவா்களுக்கு சம்பந்தமே இல்லாத பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை துறைகளில் தன்னிச்சையாக பணி நியமனம் செய்திருப்பது அதிா்ச்சியளிப்பதாக உள்ளது.

ADVERTISEMENT

இதனால், அந்த துறைகளில் பணியாற்ற நீண்டகாலமாக காத்திருக்கும் முதுநிலை மருத்துவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அதுமட்டுமல்லாது, இத்தகைய நடவடிக்கைகள் அத்துறைகளின் செயல்பாடுகளிலும் பின்னடைவை ஏற்படுத்தும்.

அடுத்து வரவிருக்கும் பொது கலந்தாய்வில் ஏற்கெனவே எம்எஸ், எம்டி முடித்துள்ள தகுதியுள்ள மருத்துவா்களுக்கு அந்தக் காலிப் பணியிடங்கள் கிடைக்காமல் போகும். கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து விட்டு, தற்போது சிறப்பு மருத்துவராக உள்ள மருத்துவா்களின் வாய்ப்பை தட்டிப் பறிப்பதாக இது உள்ளது. இது இதுவரையில் இல்லாத நடைமுறையாகவும், ஏற்கெனவே இருக்கும் அரசாணைக்கு எதிராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT