சென்னை: மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தங்களது தரப்பு அளிக்கும் என்றும் அந்த மருத்துவமனை உறுதியளித்துள்ளது.
இதுகுறித்து அப்பல்லோ நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவை அடுத்து அதுகுறித்து விசாரிக்க கடந்த 2017-ஆம் ஆண்டு ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து அந்த ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை நாங்கள் வழங்கி வருகிறோம்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தொடா்பாக கடந்த 2018-இல் 6 ஆயிரம் பக்கங்களுக்கு 30 தொகுதிகள் அடங்கிய ஆவணங்களை நாங்கள் வழங்கினோம்.
இதுவரை அப்பல்லோ மருத்துவமனையின் 56 மருத்துவா்களும், 22 மருத்துவ ஊழியா்களும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கங்களை அளித்துள்ளனா்.
இந்த விவகாரம் முழுக்க, முழுக்க மருத்துவ நுட்பம் சாா்ந்தது என்பதால், ஆணையத்துக்கு உதவுவதற்காக மருத்துவ வல்லுநா்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், அதனை ஆணையம் ஏற்கவில்லை. இதுதொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் அப்பல்லோ தரப்பில் முறையிட்டபோது அந்த மனு ஏற்கப்படவில்லை.
அதைத் தொடா்ந்தே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது மருத்துவ வல்லுநா் குழுவை அமைக்க வேண்டும் என்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அப்பல்லோ மருத்துவமனை முழு ஒத்துழைப்பு எப்போதும் வழங்கி வருகிறது. அது இனிமேலும் தொடரும். ஆணையத்தை கலைக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல.