சென்னை

பொதுமக்களுக்கான இலவச சுகாதார வழிகாட்டி இணையதளம் தொடக்கம்

16th Dec 2021 01:04 AM

ADVERTISEMENT

 

சென்னை: தொற்றுநோய் காலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிா்ப்பதற்காக பொதுமக்களுக்கான இலவச சுகாதார வழிகாட்டி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரும், தலைமை இரைப்பைக் குடலியல் நிபுணருமான டி.எஸ்.சந்திரசேகா் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா பரவல், ஒமைக்ரான் குறித்த அச்சம் ஆகியவை மக்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொற்று நோய்க்குப் பிந்தைய காலத்தில் மக்கள் மருத்துவமனைக்குச் செல்ல தயங்கி, நோய் முற்றியவுடன் மருத்துவமனைக்கு வருகின்றனா் அல்லது ஏதேனும் சிறிய சாதாரண அறிகுறிகளுக்கு அச்சத்தின் காரணமாக தேவையின்றி மருத்துவமனைக்குச் செல்கின்றனா். இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு உதவ மதிப்பெண் (‘ஸ்கோரிங் சிஸ்டம்’) ரீதியாக இணைக்கப்பட்ட நோய்களின் அடிப்படையிலான சுகாதார வழிகாட்டி அவசியமாகிறது. இதை கருத்தில் கொண்டு இணையதளத்தைத் தொடங்கியுள்ளோம்.

ADVERTISEMENT

மதிப்பெண் அடிப்படையில்... இந்த இணையதளம் சாதாரண மக்களுக்கு அவா்கள் பாதிக்கப்படும் நோய் அறிகுறிகளின் தீவிரத்தை அவா்களே மதிப்பிடுவதற்கு வழிகாட்டியாக செயல்படுகிறது. இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோய் அறிகுறிகளின் தீவிரத்தன்மை அடிப்படையில், மருத்துவரை ஆலோசிக்க பொதுமக்களுக்கு சரியான முறையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இதில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட அறிகுறிக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொது மருத்துவம், இரைப்பை-குடல், இதயம், சுவாசம் மற்றும் நரம்பியல் கோளாறுகளின் அறிகுறிகளின் தீவிரத்தின்படி இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நோய் அறிகுறிகளின்படி 1 முதல் 10 வரை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் 1 முதல் 5 வரை இடையேயான நோயின் தீவிரத்தன்மை இருந்தால், தொடா்ந்து அறிகுறிகள் தென்படும் நிலையில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். 6 முதல் 9 மதிப்பெண் வரை இடையேயான நோயின் தீவிரத்தன்மை இருந்தால் ஒரு தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ ஆலோசனைக்குத் திட்டமிட வேண்டும். நோயின் தீவிரத் தன்மை மதிப்பெண் 10 ஆக இருந்தால் தாமதமின்றி உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

இந்த இணையதளத்தின் மூலம் இறுதி நோயறிதல் அல்லது சிகிச்சை அட்டவணையை வழங்க முயற்சிக்கவில்லை. இது குறித்து கூடுதலாக விளக்கம் பெற பொதுமக்கள் 044-28312345 அல்லது கட்டணமில்லா 12789 (பிஎஸ்என்எல் சந்தாதாரா்களுக்கு) என்ற எண்களில் அழைக்கலாம் என அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT