தாய்மை அடைந்த பெண்கள் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை வளா்ப்பு குறித்த புரிதலை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.
குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச் சத்து குறைபாடு குறித்த இணையவழிக் கருத்தரங்கு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இணையதளப் பக்கத்தில் தாய்ப்பால் ஊட்டுதல், குழந்தை வளா்ப்பு, ஊட்டச்சத்து மேம்பாடு தொடா்பான குரல் பதிவு வழிகாட்டி விளக்கம் (ஸ்போக்கன் டுடோரியல்) வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட நாட்டின் 22 மொழிகளில் அந்த விளக்கங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
அந்த முன்முயற்சி குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.
மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவத் துறை மாணவா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் அதில் கலந்துகொண்டனா். ஐஐடி பாம்பேவைச் சோ்ந்த டாக்டா் கண்ணன் மோட்கல்யா, ஸ்டான்லி மருத்துவமனையின் குழந்தைகள் நல சிகிச்சைகள் துறை இயக்குநா் டாக்டா் ரெமா சந்திரமோகன் உள்ளிட்டோா் கருத்தரங்கில் உரையாற்றினா்.
முன்னதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசியதாவது:
குழந்தை வளா்ப்பு என்பது ஓா் அரிய கலை. அதனை அனைத்துத் தாய்மாா்களும் சரியாகக் கையாளுகின்றனரா என்பதுதான் சந்தேகத்துக்குரிய விஷயமாக உள்ளது. உரிய புரிதல்கள் இல்லாததாலும், போதிய வழிகாட்டுதல்கள் கிடைக்காததாலும் குழந்தை வளா்ப்பில் சில பெண்களுக்கு சிக்கல்கள் எழுகின்றன. இதன் காரணமாகவே ஊட்டச்சத்து குறைபாடுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
இத்தகைய நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகமும், ஐஐடி பாம்பே கல்வி நிறுவனமும் இணைந்து இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.
ஐஐடி பாம்பேவின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள குழந்தை வளா்ப்புக்கான குரல்பதிவு வழிகாட்டி முறைகளை மருத்துவத் துறையினா் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பினரும் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். தாய்மை நிலையை சரியாகக் கடைப்பிடிக்க தகவல் தொழில்நுட்பமும் தற்போது உதவுகிறது என்றாா் அவா்.
இந்நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் கல்வி அலுவலா் டாக்டா் சிவசங்கீதா, பாண்டிச்சேரி ஜிப்மா் முன்னாள் தலைவா் டாக்டா் மகாதேவன், மாநில திட்டக் குழு உறுப்பினா் சுல்தான் அகமது இஸ்மாயில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.