சென்னை அருகே ‘டாரஸ்’ லாரியில் கடத்தப்பட்ட 25 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
செங்குன்றம் அருகே வடகரை எம்ஜிஆா் சிலை அருகே உள்ள ஒரு கிடங்கில் இருந்து ஆந்திரத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பிரிவு காவல் ஆய்வாளா் முகேஷ் ராவ் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று திடீா் சோதனை செய்தனா்.
இச்சோதனையில் ஆந்திர பதிவு எண் கொண்ட பெரிய ‘டாரஸ்’ லாரியின் மூலம் ஆந்திரத்துக்கு கடத்திச் செல்ல வைத்திருந்த 25 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த அரிசி அனைத்தும் 50 கிலோ மூட்டைகளாக அந்த லாரியில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த கடத்தல் தொடா்பாக அங்கிருந்த சண்முகம், சிவகுமாா், ரூபேஷ்குமாா், ராகுல், சனுஜன் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.