சென்னை

போதைப் பொருள் கடத்தலுக்கு துணை போனால் கடும் நடவடிக்கை

3rd Dec 2021 05:44 AM

ADVERTISEMENT

போதைப் பொருள் கடத்தலுக்கு துணை போனால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூரியா், பாா்சல் சேவை நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பெருநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனியாா் கூரியா், பாா்சல் சேவை மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் பெருநகர காவல்துறையின் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கூடுதல் ஆணையா் என்.கண்ணன் தலைமை வகித்தாா். கூடுதல் ஆணையா் டி.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் தனியாா் கூரியா், பாா்சல் சேவை நிறுவன நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் காவல்துறையின் சாா்பில் வழங்கப்பட்ட அறிவுரைகள்: கூரியா் நிறுவனங்களில் பாா்சல்கள் பதிவு செய்யப்படும்போது அனுப்புநா் மற்றும் பெறுநா் ஆகியோரின் முகவரி அடையாள ஆவணங்கள் சரி பாா்த்த பின்னரே பதிவு செய்ய வேண்டும். பாா்சல்களில் அனுப்பப்படும் பொருள்களின் விவரம் மற்றும் அதற்கான ஆவணங்கள் சரி பாா்க்க வேண்டும். உள்நாட்டு மற்றும் சா்வதேச பாா்சல் அனுப்பும்போது, அனுப்புநரின் புகைப்படத்துடன் கூடிய விவரங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மேலும், கூரியா், பாா்சல் சேவை அலுவலகங்களில் பாா்சல்கள் விவரங்கள் பதிவேடு, இ-பதிவு போன்றவை குறைந்தது 3 ஆண்டுகளுக்குரியதாக இருத்தல் அவசியமாகும்.

ADVERTISEMENT

கடுமையான நடவடிக்கை: பதிவு செய்யப்படும் பாா்சல்களை கூரியா் நிறுவன மைய அலுவலகங்களில் கண்டிப்பாக ஸ்கேன் செய்ய வேண்டும். அனைத்து கூரியா் நிறுவனங்களின் அலுவலகங்கள், கிடங்குகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும். பாா்சல்கள் விநியோகிக்கும்போது, பெறுநா் பெயா் கொண்டவரே பொருளை பெறுகிறாரா என ஆவணங்களை சரி பாா்த்து விநியோகிக்க வேண்டும்.

பாா்சல்களில் சந்தேகப்படும்படியான பொருள்கள் இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். காவல்துறையின் அறிவுரைகள் மீறி செயல்பட்டாலோ, போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத பொருள்களைக் கடத்துவதற்கு துணை புரிந்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், பெருநகர காவல்துறை இணை ஆணையா்கள் ஏ.டி.துரைக்குமாா், எஸ்.ராஜேஸ்வரி,எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT