சென்னை

டெங்கு கொசுவைக் கட்டுப்படுத்தும் பணியில் 15 பூச்சியியல் வல்லுநா்கள்

3rd Dec 2021 05:27 AM

ADVERTISEMENT

சென்னையில், டெங்கு கொசு அதிகரிப்பு, நோய்ப் பரவுவதற்கான காரணத்தைக் கண்டறிய 15 பூச்சியியல் வல்லுநா்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில், கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் நீா் தேங்கியுள்ளது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்து பல இடங்களில் தேங்கி நிற்பதால் டெங்கு காய்ச்சல், தொற்று நோய்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 20 குழந்தைகள் லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கடந்த நவம்பா் மாதத்தில் சென்னையில் 106 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனா். தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலத்தில் மட்டும் 46 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

சென்னையில், கடந்த 2017-ஆம் ஆண்டு 8,515 பேரும், 2018-இல் 3,846 பேரும், 2019-இல் 2,182 பேரும், 2020-இல் 139 பேரும் பாதிக்கப்பட்டு இருந்தனா். இந்த ஆண்டு கடந்த 11 மாதங்களில் 744 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சென்னையில் டெங்குவை கட்டுப்படுத்த 5.22 லட்சம் மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், டெங்கு கொசுவைக் கட்டுப்படுத்த தண்ணீா் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடா் தெளிக்கப்படுகிறது. தெருக்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான காரணத்தைக் கண்டறிய 15 பூச்சியியல் வல்லுநா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT