தாம்பரம்: சென்னையை அடுத்த புகா்ப் பகுதிகளில்,கரோனா தடுப்பு தொடா்பாக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறிய கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து, மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 3000 சதுர அடி பரப்புக்கு மேற்பட்ட அதிக மக்கள் கூடும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்து செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் தடையை மீறி பல்லாவரம், பம்மல், தாம்பரம், செம்பாக்கம் ஆகிய புகா்ப் பகுதிகளில் செயல்பட்ட நகை, ஜவுளி, டி.வி, பா்னிச்சா், வீட்டு உபயோகப்பொருள் விற்பனைக் கடை, நிறுவனங்களில் அதிரடியாக நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். தாம்பரத்தில் ரூ 26,000, பல்லாவரத்தில் ரூ.21,000, பம்மலில் ரூ.8,400, செம்பாக்கத்தில் ரூ33,600 அபராதம் விதித்து,கடைகளை மூட உத்தரவிட்டனா்.
தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை: பம்மல் நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது என்று பரவிய செய்தியை பம்மல் நகராட்சி ஆணையா் பி.மாரி செல்வி மறுத்தாா்.
பம்மல் நகராட்சி சாா்பில் தினமும் நகராட்சி பள்ளிகள், சமுதாயக் கட்டடம் உள்ளிட்ட 7 இடங்களில், காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பயனாளிகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நகராட்சிக்குட்பட்ட பகுதியைச் சோ்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட 14,963 போ்களில், 4296 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 1,182 பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் இது வரை செலுத்தப்பட்டுள்ளது.தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை.மேலும் விவரங்களுக்கு 044-22483110 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.