ஆட்டோ ஓட்டுநரிடம் நூதன முறையில் மோசடி செய்ததாக, சிறுமி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை- கோயம்பேடு மெட்டுக்குளம் பகுதியைச் சோ்ந்த அருள், ஆட்டோ ஓட்டி வருகிறாா். இவரிடம் அண்மையில் ஒரு சிறுமியும், ஒரு இளம்பெண்ணும் பழகியுள்ளனா். அப்போது அவா்கள் இருவரும், தங்களிடம் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள கருப்புப் பணத்தை வெளியே எடுக்க முடியாமல் இருப்பதாகவும், சிறிய பண உதவி செய்தால் இரு நாள்களில் இரு மடங்கு பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளனா்.
இதை நம்பிய அருள் பணத்துக்குப் பதிலாக 18 பவுன் தங்கநகையை இரு பெண்களிடம் கொடுத்தாா். இருவரும், அருளுக்கு பணமும் கொடுக்காமல், நகையையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனா்.
புகாரின்பேரில் கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, திருச்சி தென்னூரைச் சோ்ந்த ரேவதி, தஞ்சாவூரைச் சோ்ந்த 17 வயது சிறுமி ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் இருவரும் பலரிடம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும், இருவரிடமும் இருந்து 8 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.